
ரஷ்ய ஜனாதிபதியின் இல்லம் மீது தாக்குதல்?
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லம் ஒன்றின் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதலை நடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மறுத்துள்ளார்.
முன்னதாக, ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள புடினின் இல்லம் ஒன்றின் மீது நீண்ட தூர ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தி, இரவு முழுவதும் கியூவ் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்றும் ரஷ்ய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் எனினும், இந்த கூற்றை “வழக்கமான ரஷ்யப் பொய்கள்” என்றுக் கூறி ஷெலென்ஸ்கி நிராகரித்துள்ளார்.
இது உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தொடர, கிரெம்ளினுக்கு வாய்ப்பை வழங்கும் நோக்கத்தைக் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளம் ஒன்றில் நேற்று பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், புடினின் இல்லத்தின் மீது ஏவப்பட்டதாகக் கூறிய 91 ஆளில்லா வானூர்திகளும், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் கூறியுள்ளார்.
அத்துடன், தாக்குதலின் விளைவாக உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த எந்த அறிக்கையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புளோரிடாவில் டொனால்ட் ட்ரம்ப்புடன் திருத்தப்பட்ட சமாதான திட்டம் குறித்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்கா உக்ரைனுக்கு 15 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கியுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்தைகள் கிட்டத்தட்ட 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பேச்சு வார்த்தைகளின் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி 50 ஆண்டுகள் வரை பாதுகாப்புக்கான உத்தரவாதங்களை விரும்புவதாக கூறியுள்ளார்.
