ரஷ்யா தீர்மானம் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் -யுக்ரைன் ஜனாதிபதி
நீண்ட நாள்களாக நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவதற்கு ரஷ்யா உடன்பட மறுப்பது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேலும் சிக்கலாக்குவதாக யுக்ரைன் ஜனாதிபதி வொளாடிமீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கும் இடையே இடம்பெற்ற முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் நிறைவடைந்துள்ள நிலையில், யுக்ரைன் ஜனாதிபதியால் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
யுத்த நிறுத்தத்துக்கான ஏராளமான அழைப்புகளை ரஷ்யா தொடர்ந்தும் நிராகரித்து வரும் நிலையில், யுத்த நிறுத்தம் தொடர்பில் விளாடிமீர் புடின் இதுவரை தீர்மானிக்கவில்லை என யுக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், யுக்ரைன் ஜனாதிபதி நாளை வொஷிங்டன் சென்று அமெரிக்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விளாடிமீர் புடினுடனான சந்திப்புக்கு பின்னர், யுக்ரைன் யுத்த நிறுத்தத்தைக் கைவிட்டு நிரந்தர அமைதி ஒப்பந்துக்கு நேரடியாகச் செல்வதைத் தாம் விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்யாவுடன் உண்மையானதும், நிலையானதும், நம்பகமான அமைதிக்கான தேவைகள் தொடர்பில் யுக்ரைன் ஜனாதிபதி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேநேரம் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து ரஷ்ய துருப்பினர் வெளியேற வேண்டும் எனவும் அவர் தனது சமூக வலைத்தள பதிவில் யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.