
ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் அதிரடி: ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!
அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள நீண்டகால தாமதத்தைக் கண்டித்து, உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMA) அறிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் பிரதம செயலாளர் ஆர்.எம்.எஸ். கசுன் சாமர ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டத்தின் பிரதிகளை அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளரின் கையொப்பத்திற்காக சமர்ப்பிக்காமை மற்றும் இடைக்கால ஏற்பாடுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதில் நிலவும் தாமதமே இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆணைக்குழுவின் மூலப் பரிந்துரைகளில் இல்லாத “பெண் நிலைய அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்தல்” போன்ற விடயங்களை, மேலதிக ஆலோசனையின்றி ரயில்வே பொது மேலாளர் தன்னிச்சையாக சேர்த்துள்ளதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
புதிய திருத்தங்களால் எழுந்துள்ள சிரேஷ்டத்துவப் பிரச்சினைகளைத் தீர்க்க இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனால் நிலைய அதிபர் சேவையின் பதவி உயர்வுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏனைய ரயில்வே தரப்பினருக்கு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பதவி உயர்வுகள் தடையின்றி வழங்கப்படும் நிலையில், நிலைய அதிபர்கள் மாத்திரம் பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்படுவதாகச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
