
ரமலான் தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் பூமிக்குள் புதைந்து மரணம்? : மியான்மார் மக்கள் மத்தியில் அதிர்ச்சி!
மியான்மரில் ரமலான் தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தால் பூமிக்குள் புதைந்து உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சி தகவல் மூன்று நாட்களின் பின்னர் வெளியாகியுள்ளது. மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது, தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தால் பூமிக்குள் புதைந்து உயிரிழந்த செய்தி மியான்மரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டு முறை ஏற்பட்ட நிலஅதிர்வில், முதல் நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.7 ஆகவும், இரண்டாவது அதிர்வு ரிக்டர் அளவில் 6.4 ஆகவும் பதிவாகியுள்ளது. மியான்மரின் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில், மதியம் 12:50 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட 3 நாட்களுக்கு பின்னர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட போது, ரமலான் கடைசி வெள்ளியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்த 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையின்போது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக , மியான்மர் முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் (யூஎஸ்ஜிஎஸ்) சார்பில், மியான்மர் நிலநடுக்கம் மிகவும் மோசமானது. இந்த நிலநடுக்கம் மோசமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தை கடக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலே அருகே 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுமார் 60 மசூதிகள் சேதமடைந்தன என்று மியான்மர் முஸ்லிம் வலையமைப்பின் வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினர் துன் கீ தெரிவித்துளள்ளார்.
இதில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த 700 இஸ்லாமியர்கள் நிலை பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை எனவும் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக, அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், துயரமான இந்த செய்தி வெளியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை
