ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால், கடந்த 22 ஆம் திகதி கைது செய்யபட்ட முன்னாள் ஜனாதிபதியை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

நீர்சத்து குறைப்பாடு காரணமாக ஏற்பட்ட அசௌகரியத்தால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கவனிக்கப்பட்டு வருகின்றார்.

இந்தநிலையில் ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பார்வையிட வரும் அரசியல் தலைவர்களின் வருகைகளை மட்டுப்படுத்துமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை முழுமையாக குணமடையவில்லை எனவும், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.