ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க நீதிமன்றில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது பதவிக்காலத்தில் 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலேயே சமன் ஏக்கநாயக்க நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிராக ஏற்கனவே வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனது மகளைப் பார்ப்பதற்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை, விசாரணைகள் முடியும் வரை அனுமதிக்க முடியாது என அரச தரப்பு தெரிவித்ததை அடுத்து அவர் அதனை மீளப் பெற்றிருந்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இந்த நிதி முறைகேடு தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

ரணில் விக்ரமசிங்கவின் குறித்த விஜயத்திற்கான நிதி அனுமதியை சமன் ஏக்கநாயக்கவே வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.