ரணிலை போன்றே அநுரவும் அரச சொத்தை தனியார் தேவைக்கு பயன்படுத்தியுள்ளார்!

மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் லிஹினி பெர்ணாண்டோ தனது பேஸ்புக் கணக்கில் ரணிலை போன்றே ஜனாதிபதி அநுரவும் அரசாங்க சொத்தை, தனியார் தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

”ஒரு நாட்டின் ஜனாதிபதி, தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாது. ஒருவர் அரசத் தலைவராகப் பதவியேற்றவுடன், அவர் ஒரு தனிப்பட்ட நபராக இருப்பதை நிறுத்திவிடுவார்.

அவரது பாதுகாப்பு, நடவடிக்கைகள் மற்றும் அவரது அன்றாடப் பணிகள் கூட அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஒரு அரசாங்கக் கூட்டத்தில், ஒரு தனியார் விழாவில் கலந்து கொண்டாலோ அல்லது வெளிநாடு பயணம் செய்தாலோ, எல்லா நேரங்களிலும் அவருடன் செல்ல ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு (PSD) கடமைப்பட்டுள்ளது என லிஹினி பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு, பொது வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே வேறுபாடு இல்லை.

”ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் பல சந்தர்ப்பங்களில் தனது உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை அரசாங்கத்துடன் தொடர்பில்லாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார்.

உதாரணமாக, அவர் தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் தனது பாதுகாப்புக் குழுவுடன் தனது தாயாரைச் சந்தித்துள்ளதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அரச நிதியை தவறாக பயன்படுத்தினார் என்பது வாதம் என்றால் ஜனாதிபதி அநுரவும் அரச வளங்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த முடிவு, இலங்கையில் ஜனாதிபதியின் பதவிக்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை காட்டுவதாக மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் லிஹினி பெர்ணாண்டோ அவரது பேஸ்புக் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.