
ரங்காவை கைது செய்யும் முயற்சிக்கு தொடர்ந்தும் தடை நீடிப்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் மேல்நீதிமன்ற நீதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணை இதுவரையில் அவர்களைச் சென்றடையவில்லை எனச் சட்டமா அதிபர் இதன்போது மன்றுரைத்தார்.
இதன்படி, சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணையை அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மனுதாரர் தரப்பை அறிவுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில் வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவின் அதிகாரிகள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
