யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை: 15 வயது சிறுவன் உயிரிழப்பு

இந்தியாவின் ஹார் மாநிலத்தில் போலி வைத்தியர் ஒருவர் யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சரன் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் (வயது – 15) என்ற சிறுவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த சிறுவன் பலமுறை வாந்தி எடுத்த நிலையில் அவரது பெற்றோரால் சரன் நகரில் உள்ள கணபதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர் அஜித் குமார் புரி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.

பின்னர் சிறுவனுக்கு பித்தப்பையில் கல் உள்ளது. அதனால்தான் அவருக்கு வாந்தி போன்ற உடல் உபாதைகள் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி பெற்றோர் சம்மதம் இல்லாமலேயே யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறிது நேரத்தில் அந்த சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் அந்த யூடியூப் போலி மருத்துவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.