
யாழ் மீனவர்களிடையே முறுகல்: பொலிஸாரிடமும் முரண்பாடு
-யாழ் நிருபர்-
யாழ் வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரிடமும் மீனவர்கள் முரண்பட்டுள்ளனர்.
உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது.
எனினும் தமது அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்துவரும் நிலையில், குறித்த கரைவலை வாடி மீனவர்களால் முற்றுகையிடப்பட்டு உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பது நிறுத்தப்பட்டது.
சம்பவ இடத்தில் அதிகளவான மீனவர்கள் ஒன்று கூடியதால் சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசாருடனும் மீனவர்கள் முறுகலில் ஈடுபட்டனர்.
இதன் போது உடனடியாக உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்வதை நிறுத்தாவிடில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.



