யாழ். மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு – மலையகம் நோக்கி புறப்பட்ட குழு

 

-யாழ் நிருபர்-

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புகளை எதிர்நோக்கினர். அத்துடன் அந்த பகுதிகளில் வாழும் மாணவர்கள் தமது கற்றல் உபகரணங்களை இழந்துள்ளனர்.

அந்தவகையில் இன்னும் ஒரு சில மாதங்களில் க.பொ.த சாதாரணதர பரீட்சை ஆரம்பமாவுள்ளது. அந்தவகையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பரீட்சைக்கு தயாராகுவதற்கான கற்றல் கையேடுகளை வழங்கும் செயற்பாட்டினை வெண்கரம் அமைப்பு முன்னெடுத்து வருகிறது.

முதற்கட்டமாக யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முக்கிய ஐந்து பாடங்களை உள்ளடக்கிய கற்றல் கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிலையில் அடுத்தகட்டமாக மலையக மாணவர்களுக்கு கற்றல் கையேடுகளை வழங்குவதற்காக வெண்கரம் அமைப்பு மலையகம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த பயணமானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. பயணத்தின் ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் உள்ள பரமேஸ்வரா ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த வழிபாடுகள் மற்றும் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வெண்கரம் அமைப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து தமது பயணத்தை ஆரம்பித்தனர்.

வெண்கரம் அமைப்பினரின் இந்த செயற்பாடுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணை அனுசரணை வழங்குகிறது.

வெண்கரம் அமைப்பின் மாணவர் குழுவினர் தன்னார்வ ரீதியாக சேகரித்த நிதியியலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.