
யாழ் போதனா வைத்தியசாலைக்கு தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அதிகாரிகள் குழு விஜயம்
திடீர் நோய் நிலைமை காரணமாகச் சிலர் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு விஜயம் மேற்கொண்ட குழு பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கரவெட்டி மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் கண்காணிப்புகளில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் சுகவீனம் அடைந்த 58 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் திடீர் சுகவீனம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேரும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்தவர்களில் இருவருக்கு எலிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
