யாழ்.பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

யாழ்.பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மூன்று நாள்களில் 8 அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 278 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெறவுள்ளனர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடம், சேர் பொன் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்பப் பீடம்,  இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ அலகு மற்றும் வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில் நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரிப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 32 தங்கப்பதக்கங்களும், 10 புலமைப்பரிசில்களும், 25 பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றன.

மேலும், ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப் பதக்கத்தை பீட மட்டத்தில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், கலைப்பீடம் மற்றும் மருத்துவபீடத்தைச் சேர்ந்த மூவரும், பல்கலைக்கழக மட்டத்தில் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவரும் பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்