யாழ் அரசாங்க அதிபராக மதம் மாற்றி ஒருவர் நியமிக்கப்பட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் – சிவசேனை

யாழ். மாவட்ட அரச அதிபராக மதம் மாற்றி ஒருவர் நியமிக்கப்படுவாராக இருந்தால் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் என, சிவசேனை அமைப்பின் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று யாழ். மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்ற போராட்டத்தின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தில் செல்ல உள்ள நிலையில் யாழ். மாவட்டத்திற்கு புதிதாக அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மதம் மாற்றி ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு எதிராக இன்றைய தினம் சிவசேனை அனுப்பினரால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்துக்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வேற்று மதத்தவர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிப்பதை அரசு மாற்றியமைக்க வேண்டும்.

இதை தவறும் பட்சத்தில் மாவட்ட செயலகத்தினை முடக்கி மாபெரும் போராட்டத்தினை சிவசேனை அமைப்பு முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.