யாழ்ப்பாணத்தில் இன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து மற்றும் திறந்து வைக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்!

யாழ்ப்பாணத்தில் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பல புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளிலும் மற்றும் திறந்து வைக்கும் நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

இதன் கீழ், வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கும், கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலிருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள் ஆகிய அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகள், குளிர்பதன வசதிகள்,வலை தயார்படுத்தல் மைய வசதிகள், ஏலவிற்பனைக் கூட வசதிகள் மற்றும் வானொலி தொடர்பு மைய வசதிகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மீன்பிடித் துறைமுகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அங்கு நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், நவீன தொழில்நுட்பம் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. வட மாகாணத்திலிருந்து கடவுச்சீட்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இலகுவாக அந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்த பிராந்திய அலுவலகம் திறக்கப்படுகிறது.

இதேவேளை, யாழ்.நூலகத்தின் ஈ-நூலக (E- Library) வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் உலகில் எங்கும் வசிப்பவருக்கு யாழ்.பொது நூலகத்தின் புத்தகங்களை இணையத்தளத்தில் ஊடாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

முன்மொழியப்பட்ட யாழ்ப்பாணம் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான கட்டுமானப் பணிகளும் இன்று பிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதோடு, அதன் பின்னர் அந்த இடத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொள்வார்.