யாழில் விசேட தேவையுடையோருக்கான விழா
-யாழ் நிருபர்-
விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் 3 ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
விசேட தேவையுடையோருக்கான தேசிய விழாவானது இம் முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதோடு இந் நிகழ்வில் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்து விசேட தேவையுடையோர் சுமார் 650 பேரின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ராதா நாணயக்கார, மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.மு.நந்தகோபாலன் ,அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் ஜெயமாலி விக்கிரமராட்சி ,மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுரேந்திரநாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்ஷினி, சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி.தனுஜா லுக்ஷாந்தன் ,கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் உதவி ஆணையாளர், கிறிஸ்தவ மதகுரு, மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு .தி.உமாசங்கர், அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.