யாழில் புலமைத்துவக் கலந்துரையாடல் நிகழ்வு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவக் கலந்துரையாடலின் முதலாவது நிகழ்வு கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தகைசார் விருந்தினர்களாக யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் அரசகரும மொழிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திலக் நந்தன கெட்டியாராய்ச்சி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தமி;ழ்ச்சங்க உபசெயலாளர் முனைவர் கி.அருட்செல்வி வரவேற்புரையாற்றினார். புலமைத்துவ உரைகளை பேராதனைப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி சி. பத்மநாதன், உருகுணைப் பல்கலைக்கழக சிங்களத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக்க ஜெயசிங்க, தென்னாடு பத்திரிகை ஆசிரியர் ஜீவா சஜீவன் ஆகியோர் வழங்கினர். பேராசிரியர் சி.பத்மநாதன் சமுகமளிக்காத நிலையில் அவரது சார்பில் பேராசிரியர் செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் உரையை சமர்ப்பித்தார். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் சி.வடிவழகையன் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்வுகளை தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினரும் யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவருமாகிய யோ. நிவேதன் முன்னிலைப்படுத்தினார்.
புலமைத்துவக் கலந்துரையாடலின் தொடர் நிகழ்வுகள் அடுத்த ஆண்டு முற்பகுதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தினர் தெரிவித்தனர்.
