யாழில் பினாமிகளின் பெயரில் சீன அட்டைப்பண்ணை

 

யாழ். மாவட்டத்தில் பினாமிகளின் பெயரில் சீன கடல் அட்டைப் பண்ணைகள் இயங்குவதாக முன்னாள் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். இந்திய துணை தூதரகத்துக்கு இந்தியா இழுவைப் படகுகளை தடை செய்யுமாறு கோரி மஜகர் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் சீனக் கடல் அட்டைப் பண்ணைகள் பினாமிகளின் பெயரில் இயங்குகின்ற நிலையில் சீனாவில் இல்லாத நிறுவனம் இலங்கையிலிருந்து சீன கடல் அட்டைகளை ஏற்றுமதி செய்வதற்காக இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டது.

வடக்கு கடற்தொழிலையும் மீனவ மக்களையும் அந்நிய படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் திரை மறைவில் பல முயற்சிகளை செய்து வருகிற நிலையில் அதற்கு அரச அதிகாரிகளும் துணை போகின்றார்கள் என்ற சந்தேகங்கள் எமக்கு எழுகிறது.

அட்டை பண்ண தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்கும் போது தாம் சில தொலைபேசி அழைப்புகளுக்கு வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாக எமக்குத் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையை தொடர்ச்சியாகச் செல்லுமானால் கடற் தொழிலை நம்பி வாழும் மீனவ மக்கள் தமது வாழ்வாதார தொழிலை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அண்மையில் சீனாவில் இருந்து கடை தொழிலாளர்களுக்கு 75 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாகவும் கடற் தொழில் அமைச்சர் அதனை மேற்கொள்வதாகவும் அறிந்தோம்.

ஆனால் குறித்த மண்ணெண்ணை சில பிரதேசங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில் உதவிகளை வழங்குவதாக கூறி வெளிநாட்டு சக்திகள் எமது அரிய வளங்களை அபகரிக்கக் கூடாது.

ஆகவே இந்திய பிரதமர் வடக்கில் இடம்பெறும் சீன கடல் அட்டைப் பண்ணையால் மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.