![](https://minnal24.com/wp-content/uploads/2024/12/IMG-20241223-WA0122.jpg)
யாழில் அதிக ஆசிரியர்கள் இருப்பதால் ஏனைய மாவட்டங்களுக்கு இடம்மாற்றம்!
-யாழ் நிருபர்-
யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், அவர்கள் மீண்டும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஒருபோதும் வெளி மாவட்டங்களில் பணியாற்றாதவர்களை விரைவில் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
வெளி மாவட்டங்களில் தாம் நீண்டகாலம் பணியாற்றுவதாகவும், செல்வாக்குகளின் அடிப்படையில் சிலர் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டிய அவர்கள், தமக்குப் பின்னர் நியமனம் பெற்றவர்கள் கூட சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஆளுநரிடம் முறையிட்டனர்.
வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும் எனவும், அவ்வாறு இதுவரை பணியாற்றாத ஆசிரியர்கள் இருப்பின் உரிய நடைமுறைக்கு அமைவாக அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
உரிய காரணங்கள் இல்லாமல் இடமாற்றங்களை வழங்க முடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், வெளி மாவட்டங்களிலிருந்து யாழ். மாவட்டத்துக்கு ஆசிரியர் ஒருவர் இடமாற்றப்படும்போது அதே பாடத்துக்குரிய ஆசிரியர் வெளிமாவட்டத்துக்கு விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். எதிர்காலத்தில் இந்த நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படும், எனவும் ஆளுநர் கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்