
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி ,பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயம்
திருகோணமலை திரியாய் கல்லம்பத்தை பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த தாக்குதலில் கல்லம்பத்தைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பழனியாண்டி மணிவண்ணன் (வயது -56) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த நபர் காட்டுக்கு விறகு வெட்டச் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரை யானை தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியவுல்பொத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தளாய் குளத்தை அண்மித்த பகுதியில் சோதனை நடவடிக்கையின் போதே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

