
மோதல்களில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7 பேர் பலி , 231 பேர் படுகாயம்
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 231 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 218 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோதல்களில் காயமடைந்தவர்கள் பலர் நேற்று இரவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரகெட்டிய:- வீரகெட்டிய பிரதேச சபைத் தலைவரின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
நிட்டம்புவ:- பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நிட்டம்புவவில் உயிரிழந்துள்ளனர்.
அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிட்டம்புவையில் திரண்டிருந்த மக்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினருடன் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு:- நீர்கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
பல இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு கார்கள் முற்றாக நாசமாயின.
இமதுவ:-இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
