மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர், தற்போது நிதி அமைச்சின் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தில் பணியாற்றி வருவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி, முறையான சட்டபூர்வ ஆவணங்கள் அல்லது வதிவிடச் சான்றுகள் இன்றி, GZ–6889 என்ற இலக்கத்தைக் கொண்ட காரை சட்டவிரோதமான முறையில் மற்றுமொருவருக்கு கைமாற்றுவதற்கு அனுமதி வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.