மோட்டார் சைக்கிளோடு தவறி ஆற்றில் விழுந்தவர் சடலமாக மீட்பு!

-அம்பாறை நிருபர்-

மோட்டார் சைக்கிளில் ஆற்றுக்கு குறுக்காக உள்ள சிறிய அணைக்கட்டை  கடக்க முற்பட்ட வேளையில்,  மோட்டார் சைக்கிள் தண்ணீரில் தவறி விழுந்து, அடித்து செல்லப்பட்டதில், ஆற்றில்  மூழ்கிய  குடும்பஸ்தர்,  நீண்ட தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அட்டப்பளம் ஆலயடிக்கட்டு பகுதியில், நேற்று திங்கட்கிழமை   மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில்,  தண்ணீரில் தவறி விழுந்து  நீரில் அடித்து செல்லப்பட்டவர், தனது மோட்டார் சைக்கிளில் மனைவி, பிள்ளையுடன் குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளனர்

குறித்த குடும்பஸ்தர் மாத்திரம் அவ்வழியினூடாக, தனியாக மோட்டார் சைக்கிளில் முன்செல்ல,  பின்னால் அவரது மனைவியும், பிள்ளையும் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது மோட்டார் சைக்கிளோடு தவறி ஆற்றில் விழுந்துள்ளார், ஆற்றில் விழுந்த அவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

நீரில் காணாமல் சென்றவரை தேடுவதற்கு, அப்பகுதியில்  நீரோட்டத்தை குறைக்கும்  முகமாக, தற்காலிகமாக அணையின் மூடிகள், உரிய தரப்பினரின் அறிவுறுத்தலுக்கமைய, நீர்பாசன திணைக்கள அதிகாரிகளினால் மூடப்பட்டு, தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த தேடுதலில், நிந்தவூர் பொலிஸாரின் பிரசன்னத்துடன், கல்முனை  ஆழ்கடல் சுழியோடி அணி, சாய்ந்தமருது ஜனாசா பேரவை அணி, நிந்தவூர் தன்னார்வ தொண்டர் அணி என்பன கடும் முயற்சி மேற்கொண்டு சடலத்தை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சடலத்தை  சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பார்வையிட்டு, மரண விசாரணை மேற்கொண்ட பின்னர், சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பின், சடலம் நேற்று திங்கட்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவத்தில், அப்துல் லத்தீப்   இக்ராம் (வயது 32) என்பவரே இவ்வாறு ஆற்றினுள் தவறி விழுந்து,  நீரில்  அடித்து செல்லப்பட்டு, உயிரிழந்துள்ளார். இவர்  வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில்  சில நாட்களுக்கு முன் விடுமுறை நிமிர்த்தம் நாடு திரும்பி இருந்த நிலையில்  இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.