
மேல் மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன் வேண்டுகோளுக்கு அமைய மேல் மாகாண கல்வி அபிவிருத்தி சம்பந்தமான ஆளுநருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று திங்கட்கிழமை இடம் பெற்றிருந்தது.
மேல் மாகாணத்தில் மூன்று மாவட்டங்களினதும் தமிழ் பாடசாலையில் மற்றும் தமிழ் மாணவர்களின் எதிர்கால கல்வி மேம்பாட்டுக்கான விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளர் வலய கல்வி பணிப்பாளர்கள் தமிழ் பிரிவிற்கான பொறுப்பான அதிகாரிகள் பிரதியமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர்களான எஸ். சிவனேசன் வசந்தமூர்த்தி மற்றும் தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்ற உறுப்பினர்கள், உலகலாவிய இந்திய வம்சாவளி மக்கள் பேரவை (கோபியோ) உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வத்தளை ஹொலியமுல்ல தமிழ் பாடசாலைக்கான ஒதுக்கப்பட்ட காணியை கல்வி திணைக்களத்தினால் பொறுப்பேற்று தொடர்ந்து கட்டுமான பணிகளை ஆரம்பித்து செயல்படுத்தல் அருண் மாணிக்கவாசகர் இந்து கல்லூரியில் கல்வி நடவடிக்கை மேலும் வலுப்படுத்துவதற்கும், கொள்ளுப்பிட்டி மெதடிஸ் தமிழ் வித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதோடு அங்கு மாணவர்களுக்கான விடுதி வசதிகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், கணித விஞ்ஞான பிரிவுகளில் ஆசிரியப் பற்றாக்குறை கட்டிடங்கள் ஏனைய பௌதிக வளங்கள் சம்பந்தமாகவும் எதிர்வரும் காலங்களில் சமூக ஆர்வாலர்கள் சமூக அமைப்புகளை இணைத்துக்கொண்டு மேல் மாகாண தமிழ் பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தியினை முன்னெடுத்து செல்லவும் தீர்மானிக்கப்பட்டது .
தமிழ் கலை கலாசார பண்பாட்டுத்துறையினை ஊக்குவிப்பதற்காக செயல்திட்டங்களை துரிதப்படுத்தி தமிழ் சாகித்ய விழாக்களை நடத்தி தமிழ் மொழி சார்ந்த வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
