மெக்டொனால்ட்ஸ் ஆஸ்திரேலியா, வாடிக்கையாளர்களின் உணவு ஆர்டர்களைப் பெறுவதற்காக டிரைவ்-த்ரூ சேவையில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் வாகனத்திலிருந்தபடியே குரல் மூலம் தங்களது ஆர்டர்களை வழங்கும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மெக்டொனால்ட்ஸ் ஆஸ்திரேலியாவின் தற்போதைய தனியுரிமைக் கொள்கையிலும், டிரைவ்-த்ரூவில் AI ஆர்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த AI அமைப்பு வாடிக்கையாளர்களின் குரல் உரையாடல்களைப் பதிவு செய்து, அவற்றை உரையாக மாற்றி ஆர்டர்களைச் செயலாக்குகிறது. ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள சில இடங்களில் இந்தத் தொழில்நுட்பத்துக்காக Google சேவைகள் பயன்படுத்தப்படுவதாகவும், சேகரிக்கப்படும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு நோக்கில் மறைக்கப்படுவதாகவும் மெக்டொனால்ட்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தங்களது ஆர்டர்களை AI மூலம் வழங்க விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு மனித பணியாளருடன் நேரடியாகப் பேசும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் துரித உணவுத்துறை முழுவதும் டிரைவ்-த்ரூ சேவைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த மாற்றம் உணவகங்களில் ஆர்டர் பெறும் முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.










