முல்லைத்தீவு கடற்கரைக்கு வந்த ரோஹிங்கியாக்கள் அதே படகில் திருகோணமலைக்கு

-வவுனியா நிருபர்-

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் சேதமடைந்த பலநாள் மீன்பிடி படகில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் குழுவை அதே கப்பலில் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்ல இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று காலை கரை ஒதுங்கிய  35 சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய் உட்பட 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கி மீட்டு கரைக்குக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் மேற்கு கரையை வந்தடைந்த அவர்களை, மாலை 5 மணியளவில் கடற்படையினர் திருகோணமலை துறைமுகத்தை நோக்கி அழைத்துச் சென்றதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த மக்களைப் பற்றி அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்ததாக, அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்த மீனவர் சங்கத் தலைவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“எங்களது ஆக்கள் கடலில் தொழில் செய்யும்போது இந்த படகைக் கண்டு அருகில் சென்று பார்த்துள்ளனர். அதன்போது அவர்கள் மயக்கமடைந்து, சோர்வாக இருந்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்கள் எங்கள் சங்கத்திற்கு அறிவித்த பின்னர் முடிந்தளவு கடற்றொழில் திணைக்களம் பொலிஸ் கிராம சேவகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவித்தோம். தண்ணி, சாப்பாடு போன்ற விடயங்களை நாங்கள் செய்தோம்.” என முள்ளிவாய்க்கால் மீனவர் சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சிவனேஸ்வரம் தெரிவித்தார்.

ஒருவருக்கொருவர் மொழியைப் புரிந்துகொள்வதில் சிரமம் காணப்பட்டமையால் இரு பிரிவினருக்கும் கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. அனைத்து சிறுவர்களும் சுமார் 5 வயதுக்குட்பட்டவர்கள் என மீனவர்களுடன் படகில் சென்ற வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

இராணுவம் மற்றும் கடற்படை பொலிஸாரும் ஏனைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் காலையிலேயே கடற்கரைக்கு வந்திருந்த போதிலும் அப்பகுதியிலுள்ள தமிழ் மீனவர்களே முதலில் அகதிகளுக்கு உணவு, குடிநீர் என்பவற்றை எடுத்துச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அகதிகளுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட மதிய உணவு கடற்படையினரால் அப்பகுதியிலுள்ள தமிழ் மீனவர்களின் படகுகள் மூலம் அகதிகளின் படகுக்கு எடுத்துச் செல்லப்பட்டதை காணொளிகளில் காணமுடிந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை பலவந்தமாக ஆக்கிரமித்து முகாமிட்டுள்ள கடற்படை அகதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஒரு படகைக் கூட கொண்டுவரவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடற்கரையை வந்தடைந்த கப்பல் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்கள் ரகயின் மாநிலத்தில் முஸ்லிம் ரோஹிங்கியாக்களுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்திய 2017ஆம் ஆண்டு முதல் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

இவர்களில் 965,000 பேர் அண்டை நாடான பங்களாதேசில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்