முறையற்ற படகு சேவை அனுமதியை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை நிலாவெளி கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையாளர்களுக்கான புறாத் தீவு படகு சேவை இடம் பெற்று வரும் நிலையில் முறையற்ற அனுமதி பத்திரம் பெற்று படகு சேவையில் ஈடுபடுவோரை நிறுத்த கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை நிலாவெளி கடற்கரை பகுதியில் இடம் பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தினை நிலாவெளி உல்லாச பிரயாணிகளின் படகு மற்றும் சேவை கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
தங்களது சங்கம் ஊடாக அனுமதி பெற்று சுழற்சி முறையில் முறையாக தொழிலை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக மூவினங்களை சேர்ந்த நாங்கள் செய்து வருகிறோம் ஆனால் முன்னால் வனஜீவராசி திணைக்கள அதிகாரி ஒருவர் முறையற்ற விதத்தில் வேறொருவரின் பெயரில் அனுமதி பத்திரத்தை வைத்து படகு சேவையில் ஈடுபடுகிறார் இதனால் தங்களது தொழில் பாதிக்கப்படுகிறது.
இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எங்களது சங்கத்தில் பலர் இந்த தொழிலை நம்பியே தினத் தொழில் இன்றி சுழற்சி முறையில் ஈடுபடுகிறோம் ஆனால் குறித்த முறையற்ற அனுமதி பெற்ற நபரின் படகு புறா தீவுக்கு தினமும் சேவையில் ஈடுபடுகின்றன.
வாழ்வாதாரம் இழக்கும் நிலையில் இருக்கிறோம் இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடத்தில் பல முறை முறையிட்டும் கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கப் பெறவில்லை இனியாவது நிரந்தர தீர்வினை உரிய அதிகாரிகள் பெற்றுத் தர வேண்டும் என கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature
Beta feature
Beta feature