மும்பையில் கைதான பொடி லெஸியை அழைத்து வர அதிகாரிகள் குழு இந்தியா பயணம்!
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லெஸி’ எனப்படும் ஜனித் மதுசங்கவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2025 டிசம்பர் 09 ஆம் திகதி பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றினால் கடுமையான நிபந்தனைகளுடன் பொடி லெஸி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எனினும், அந்த நிபந்தனைகளை மீறி அவர் சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று இந்தியாவில் ஒளிந்திருந்தார்.
இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் வழங்கிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு (2025) ஜனவரி 16 ஆம் திகதி இந்தியாவின் மும்பை நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
இவரது கைது குறித்து இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் இலங்கை பாதுகாப்புத் துறையினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விரைவாக இலங்கைக்கு நாடு கடத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
அதன்படி, தற்போது அவரைப் பொறுப்பேற்று இலங்கைக்குக் கொண்டு வருவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், இவருக்கு எதிராக நிலுவையிலுள்ள பல குற்றச்சாட்டுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
