முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு

புத்தளம் -மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்திலுள்ள வீதியோரத்தில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 36 வயதுடைய முன்னாள் விமானப் படை வீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என, மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை விமானப்படையில் விமானப் படை வீரராக பணிபுரிந்த நிலையில் அதிலிருந்து விலகியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றதுடன், முதற்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பொலிஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், பிராந்திய பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரனைகளை முன்னெடுத்தனர்.

இது ஒரு கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை நடத்தியதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்