முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

14 வருடங்களாக நடைபெற்று வந்த லலித்குமார் வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் கடத்தல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதை அடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011 டிசம்பர் 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உலக மனித உரிமைகள் தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த போது லலித் குமார் வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டனர்.

குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை யாழ் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

எனினும் அவரது சட்டத்தரணிகள் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தான் அவர் யாழ்ப்பாணத்தில் வந்து நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை என தெரிவித்தனர்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி

இந்த வழக்கு தொடர்பாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே உறுதிமொழி அளித்திருந்தார்

இருப்பினும் வெளியில் சொல்ல முடியாத சில பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக அவரால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை. எனினும் அவர் காணொளி மூலமாக சாட்சியமளிக்க முயன்றார்

ஆனாலும் மனுதாரர்கள் அதை எதிர்த்ததாகவும்இ நீதிமன்றத்திற்கு முன் நேரில் வந்து சாட்சியமளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 6 பெப்ரவரி 2026 திகதிக்கு முன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.