முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு வாகனங்களை மீளத் தருமாறு கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்த அவர்களது பாதுகாப்பு வாகனங்களை மீளக் கோரியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்ததன் ஊடாக அவர்களது பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் காணப்படுமாயின் அந்த வாகனங்களை மீண்டும் வழங்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் இந்த கோரிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு மறு ஆய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்யும் சட்டம் காரணமாக அவர்கள் பயணித்த வாகனங்கள் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் உள்ளி்ட்ட பல சலுகைகளை இழந்தனர்.

இருப்பினும் இந்த சட்டம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.