முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த – அரசியல் பிரவேசமும் இறப்பும்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 57 ஆவது வயதில் அவர் காலமானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தவின் மகனான லொஹான் ரத்வத்த,
கண்டி திரித்துவ கல்லூரியின் பழைய மாணவரும், ஒர் பிரபல ரக்பி வீரருமாவார்
2009ஆம் ஆண்டு மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியீட்டி மாகாணசபை உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.
பின்னர் 2010, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்
இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சராகவும், சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சராகவும் லொஹான் ரத்வத்த கடமையாற்றியிருந்தார்.
2001ஆம் ஆண்டு உடதலவின்ன பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் லொஹான் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அதேவேளை, கடந்த 2021ஆம் ஆண்டில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை மிரட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
கடந்த 2024 நவம்பர் மாதம், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் விவகாரத்தில் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர, நுரையீரல் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் லொஹான் ரத்வத்த அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
