
முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட கைது
முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு கோடியே அறுபது இலட்சம் (46 மில்லியன்) ரூபாய் பணத்தை ஈட்டிய முறையை வெளிப்படுத்தத் தவறியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுஷ பெல்பிட்ட இன்று வெள்ளிக்கிழமை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான நிலையில், அவரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், அவர் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அனுஷ பெல்பிட்ட இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியும், முன்னாள் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரும் ஆவார். இவர் 2022 ஜூலையில் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராகப் பொறுப்பேற்றார். முன்னதாக, இவர் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
