
முத்து நகர் விவசாயிகள் 30 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரக போராட்டம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள், தங்களது விவசாய நில அபகரிப்புக்கு எதிராக, நேற்று வியாழக்கிழமையுடன் 30 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் மாவட்ட செயலகம் முன்பாக இடம் பெற்று வருகிறது.
இவ்வாறான நிலையில், பிரதமர் வழங்கிய இரண்டாம் கட்ட வாக்குறுதிக்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளதாக, போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் காணி என கூறி, 352 விவசாய குடும்பங்களை வெளியேற்றி, சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு தாரை வார்த்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் இரு விவசாய நீர்ப்பாசன குளங்களை மூடி, சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்துக்கு வழங்கியதால் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சாதகமான தீர்வை பெற்றுத் தராத பட்சத்தில், போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.
