முத்தரப்பு இணையர் வாழ்க்கை
தற்காலத்தில் காதல் பல விதமாக காணப்படுகிறது. திருமண வாழ்க்கை அல்லது ஒரு ஜோடியினரின் காதல் வாழ்க்கை என்றால் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து இந்த வாழ்க்கையை முன்னெடுக்கின்றனர். இதுதான் உலகெங்கிலும் பெரும்பான்மை மக்கள் கடைப்பிடிக்கும் முறையும் ஆகும். இதுபோக தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள், இரு பாலின ஈர்ப்பு கொண்டவர்கள், மூன்றாம் பாலினத்தவரை விரும்பக் கூடியவர்கள் என்று வெவ்வேறு காதல் முறைகள் இருக்கின்றன.
திருமண வாழ்க்கையை பொருத்தமட்டிலும் பலதார மணங்களை செய்து கொள்ளும் பழைய காலத்து வாழ்க்கை முறை குறித்தும் நாம் தெரிந்து வைத்திருப்போம். அதேபோல ஒரு திருமண பந்தத்தில் இருக்கும் போதே வேறொரு துணை மீது காதல் வசப்படும் அல்லது பாலியல் உறவை தேடிச் செல்லுகின்ற வாழ்க்கை முறையை திருமணம் கடந்த உறவு என்று சொல்லுகின்றோம்.
வாழ்க்கை முறைகள் இருக்க, புதிதாக முத்தரப்பு இணையர் வாழ்க்கை அதாவது Throuple Relationship என்றொரு முறை உலகெங்கிலும் பரவிக் கொண்டிருக்கிறது. இதென்ன புதிதாக இருக்கிறதே என்று ஆச்சரியம் அடையத் தேவையில்லை. இதுவும் ஏறக்குறைய பலதார மணவாழ்க்கையை போலத்தான். ஒரு ஆண் இரண்டு பெண்களோடு இணைந்து வாழ்வது அல்லது ஒரு பெண் இரண்டு ஆண்களோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறைக்கு பெயர் தான் முத்தரப்பு இணையர் வாழ்க்கை ஆகும்.
இதில் புதுமை அல்லது வேறுபாடு என்ன இருக்கிறது? என்று கேட்டால், பலதார மண வாழ்க்கையில் ஒரு ஆண் இரண்டு பெண்கள் மீது காதல் உறவு கொண்டிருப்பார். ஆனால், முத்தரப்பு இணையர் வாழ்க்கை கொஞ்சம் வேறுபட்டது. ஒரு ஆண் இரண்டு பெண்களின் மீது காதல் கொண்டிருக்கும் அதே சமயத்தில், அந்தப் பெண்கள் தங்களுக்குள் லெஸ்பியன் வாழ்க்கை முறையை விரும்பக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த முக்கோண காதலில் ஒருவரை,ஒருவர் விட்டுக் கொடுக்காமல் எப்போதும் போல தன் துணைகள் மீது மிகுந்த காதல் கொண்டிருப்பார்களாம். பாரம்பரியமிக்க இரட்டையர் வாழ்க்கை மீது சலிப்பு கொண்டவர்கள் இப்போது இந்த வாழ்க்கையை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
இந்த வாழ்க்கைக்கான விதிமுறைகள் என்ன?
இதற்கென்று தனி விதிமுறைகள் எதுவும் கிடையாது. நாம் ஒற்றை நபர் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்காமல், மற்றொருவர் மீது அளவில்லா காதல் கொண்டு ஒரே வீட்டில் வாழுவதுதான் இதனுடைய அடிப்படை. எஞ்சியிருக்கும் இரண்டு துணைகளில் யார் மீதும் நமக்கு வெறுப்பு அல்லது பாரபட்சம் வந்துவிடக் கூடாது என்பதுதான் இந்த உறவுக்கான பாலம் ஆகும்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இதுபோன்று முத்தரப்பு இணையர்களாக வாழுகின்ற அலானா, கெவின், மேகன் ஆகியோர் அண்மையில் குதூகலமாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோதான் தற்போது வைரலாகவும், விவாதப் பொருளாகவும் இருக்கிறது.
ஒருவனுக்கு, ஒருத்தி என்பதெல்லாம் காலனியாதிக்க காலத்து நம்பிக்கை என்ற எண்ணம் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாட்டு மக்களின் எண்ணங்களில் பரவுகிறது. இந்த உறவு முறையில் மிகுந்த பாதுகாப்பு கிடைப்பதாகவும், குதூகலம் நிறைந்திருப்பதாகவும் அவர்கள் நினைக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்