முதல் முறையாக ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட திருநங்கை!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக திரைப்படங்களுக்கான வருடாந்த ஆஸ்கார் விருது விழாவிற்கான திகதி இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இதேவேளை மார்ச் 2 ஆம் திகதி லொஸ் ஏஞ்சலிஸில் 97 ஆவது ஆஸ்கார் விருது விழா நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் கீழ் இந்த வருடத்தின் விருதுகளுக்கான இறுதித் தேர்வு பட்டியலை ஆஸ்கார் குழு நேற்று வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக, பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய “எமிலியா பெரெஸ்” திரைப்படமானது சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பாடல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் திருநங்கையான கர்லா சோஃபியா காஸ்கன் (Karla Sofía Gascón) சிறந்த நடிகை பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
திருநங்கை நடிகை ஒருவர் சிறந்த நடிகை பிரிவில் ஆஸ்கார் பரிந்துரையில் இடம்பெற்றது இதுவே முதல்முறையாகும்.
அத்தோடு ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படம் ஒன்று அதிக பிரிவில் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல்முறை.
எமிலியா பெரெஸ் படத்துக்கு அடுத்தபடியாக ஜான் எம். சூ இயக்கிய ஹாலிவுட் திரைப்படமான ‘விக்டு’ திரைப்படம் 10 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் பிராடி கார்பெட் இயக்கிய ‘தி புரூட்டலிஸ்’ திரைப்படமும் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்