அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரத்தைத் தொடர்ந்து, முதலீட்டு அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்தி, தொழில்துறை வளர்ச்சிக்கு நீண்டகாலமாகத் தடையாக இருந்து வரும் அதிகாரத்துவத் தடைகளை நீக்கும் நோக்கில் தேசிய வர்த்தக வசதிப்படுத்தல் நிலையம் (National Business Facilitation Centre – NBFC) எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கவுள்ள இந்த நிலையம், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான ஒரே தொடர்பு மையமாகச் செயல்படும். பல்வேறு அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, காணி ஒதுக்கீடு, திட்ட அபிவிருத்தி, சுற்றுச்சூழல் அனுமதிகள், ஒழுங்குமுறை உரிமங்கள், மின்சாரம் மற்றும் ஏனைய பயன்பாட்டு வசதிகளுக்கான இணைப்புகள், அத்துடன் நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் இது செயல்படவுள்ளது.
நிர்வாகத் தடைகள் மற்றும் தேவையற்ற தாமதங்களைக் குறைத்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், 2028ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ள கடன் திருப்பிச் செலுத்தும் பொறுப்புகளை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் இந்த நிலையத்தின் நோக்கமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும், தேசிய வர்த்தக வசதிப்படுத்தல் நிலையத்தின் தலைவருமான சீவலி அருக்கொட,
ஆரம்ப கட்டத்தில் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் அன்றாட ஒழுங்குமுறை, சட்ட மற்றும் கொள்கை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்த நிலையம் கவனம் செலுத்தும் என தெரிவித்தார்.
அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வர்த்தகர்கள் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடுகளை முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய வர்த்தக வசதிப்படுத்தல் நிலையம் இரண்டு கட்டங்களாகச் செயல்படவுள்ளதாக அருக்கொட தெரிவித்தார். முதலாவது கட்டத்தில் உடனடியாகத் தீர்க்கக்கூடிய ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகத் தடைகள் அகற்றப்படும். பின்னர், முதலீட்டுக்கான மூலதனம் இருந்தும் தொழில் திட்டம் இல்லாதவர்களுக்கு ஒரே சாளர முறையின் கீழ் ஆரம்பம் முதல் இறுதி வரை தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுக்கள் மூலம் திட்ட முன்மொழிவுகளைத் தயாரித்தல், காணி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்தல், தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
மேலும், தொழில்முனைவோர் தங்களது பிரச்சினைகளை இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்கக்கூடிய வகையில் உத்தியோகபூர்வ இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் கொழும்பில் அமைக்கப்படவுள்ள நிலையத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் தசுன் ராஜபக்ஷ, முதலீட்டாளர்களின் கோரிக்கைகளுக்கு அரச நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கத் தவறுவதால் பல சந்தர்ப்பங்களில் தாமதங்கள் ஏற்படுவதாக தெரிவித்தார்.
இந்த முயற்சியின் மூலம் முதலீட்டாளர் தொடர்புகொள்ள வேண்டிய ஒவ்வொரு அரச நிறுவனத்தையும் NBFC ஊடாக நேரடியாக ஒருங்கிணைத்து, அனைத்து தாமதங்களுக்கும் தீர்வு காணக்கூடிய ஒரே மையமாக இதனை மாற்றுவதே எமது நோக்கம், என அவர் தெரிவித்தார்.
தேசிய வர்த்தக வசதிப்படுத்தல் நிலையம் கொழும்பு 7, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, இலக்கம் C 80 என்ற முகவரியில் அமைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இயங்கும் தேசிய வழிநடத்தல் குழுவின் கீழ் இந்த நிலையம் செயல்படும். அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளதுடன், முதலீட்டாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரச நிறுவனங்களிடம் நேரடியாகத் தலையீடு செய்யும் அதிகாரமும் குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.










