மீனவர்கள் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்
-மன்னார் நிருபர்-
கடற்தொழிலில் ஈடுபடும் தமக்கு தொழில் ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாஸ் நடைமுறை மற்றும் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாட்டை கண்டித்து மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் இன்று வியாழக்கிழமை காலை 11.45 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன் ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பள்ளிமுனை கடற்கரை யில் இருந்து அட்டை பிடிக்க கடலுக்குச் செல்லும் பள்ளிமுனை கிராம மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக கடற்படையினர் இடையூரை ஏற்படுத்துவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை பள்ளிமுனை கடற்கரையில் இருந்து கடலட்டை பிடிக்க தொழிலுக்குச் செல்ல முயன்ற போது தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
படகு ஒன்றில் 3 பேர் மாத்திரமே செல்ல முடியும் என கடற்படை அறிவித்தமையினால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாம் பாஸ் நடை முறையினால் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்து இன்றைய தினம் பள்ளிமுனை கிராம மக்கள் தமது கிராமத்தில் இருந்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலகம் வரை வருகை தந்து மாவட்டச் செயலக பிரதான நுழை வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலில் பிடிபடும் ஒவ்வொரு வகையான கடல் உணவுகளுக்கும் ஒவ்வொரு அனுமதிப் பத்திரமா?,வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் மீன்பிடியில் ஈடுபடும் போது ஏன் எங்களை கடலுக்குள் செல்ல தடை விதிக்கின்றீர்கள்?,சுதந்திரமாக வடபகுதி கடலில் தொழில் செய்த எங்களுக்கு ஏன் இப்போது தடை ?,உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடல் தொழிலுக்குச் செல்லும் போது கடற்படையினர் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குகின்ற போதும்,மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தமக்கு பாரிய இடையூரை ஏற்படுத்துவதாகவும்,கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமையவே கடற்படையினர் கெடுபிடிகளை மேற் கொள்ளுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
எனவே கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களுக்கு தொழில் ரீதியாக வழங்கப்படும் தனித்தனி பாஸ் நடைமுறை நிறுத்தப்பட்டு பொதுவான பாஸ் வழங்கப்பட வேண்டும் எனவும்,அட்டை பிடிக்க செல்லும் போது படகு ஒன்றில் மூவர் மட்டுமே செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும் எனவும்,மன்னார் கடற்றொழில் திணைக்களம் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்