மீனவர்கள் இருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை: 4 பேர் நிபந்தனையுடன் விடுதலை

-யாழ் நிருபர்-

கடந்த மாசி மாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரது வழக்கு இன்று புதன்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இம்மாதம் 5 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றையதினம் வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

சிறைச்சாலை அதிகாரிகளால் இன்றைய தினம் 6 மீனவர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கினை ஆராய்ந்த நீதவான் 6 பேரில் 4 பேருக்கு ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனை வழங்கி நிபந்தனயுடன் விடுதலை செய்தார்.

இந்த 6 பேரில் இருவர் படகோட்டிகள் என்பதால் அவர்களுக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது. அத்துடன் படகோட்டிகள் இருவருக்கும் தலா நான்கு மில்லியன் ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை படகுகளுடன் கடற் படையினர் இவர்களை கைது செய்திருந்தனர்.