மீனவரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது!

மீனவரை அச்சுறுத்தி, ஒரு தொகுதி பணத்தை கொள்ளையிட்டு சென்ற சந்தேக நபரை, பெரிய நீலாவணை பொலிஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மீன்பிடித்து ஜீவனோபாயம் செய்து வரும் நபரை பின்தொடர்ந்த சந்தேக நபர், குறித்த மீனவரை மிரட்டி அச்சுறுத்தி, அவர் வசம் வைத்திருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றிருந்தார்.

இதன் போது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, துரிதமாக செயற்பட்ட பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரன் தலைமையிலான பொலிஸார், உடனடியாக சந்தேக நபரை கைது செய்தனர்.

இதன் போது, சந்தேக நபர் கொள்ளையிட்டு சென்ற பணம் உள்ளிட்ட பொருட்களை மீட்ட பொலிஸார், சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் 50 வயது மதிக்கத்தக்க கைதான சந்தேக நபர் குறித்து, மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரனின் வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.