மீண்டெழும் இலங்கை ரயில் சேவை: 70% பாதைகள் தயார்

 

‘டிட்வா’ சூறாவளியின் பாதிப்புகளுக்குப் பின்னர், இலங்கையின் ரயில் வலையமைப்பில் சுமார் 70 சதவீத சேவைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்தியாவசிய சேவைகள் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, 1,098 கிலோமீட்டர் ரயில் பாதைகளில் பயணிகள் ரயில் சேவைகள் இயக்கப்பட்டன.

இது நாட்டின் மொத்த ரயில் வலையமைப்பில் 69 சதவீதமாகும்.

இலங்கையின் ஒட்டுமொத்த ரயில் பாதையின் நீளம் 1,593 கிலோமீட்டர் ஆகும்.

மீளமைப்புப் பணிகளின் பின்னர் பின்வரும் பாதைகளில் பயணிகள் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது:

வடக்கு பாதை: கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை (பெரும்பாலான பகுதிகள்).
தெற்கு பாதை: கொழும்பிலிருந்து மாத்தறை மற்றும் பெலியத்தை வரை.
ஏனையவை: கிழக்கு மற்றும் வடமத்திய வலையமைப்பின் சில பகுதிகள்.

இருப்பினும், புயல் தொடர்பான சேதம் காரணமாக பல ரயில் பிரிவுகள் இன்னும் இயக்கப்படவில்லை.

இதன்படி மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, கண்டி மற்றும் மலையக ரயில் பாதையின் சில பகுதிகளை இணைக்கும் பிரிவுகள் இதில் அடங்கும்.

குறித்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.