மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ள இலங்கை அணி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இலங்கை அணி மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முனனேறியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி கைப்பற்றியதால் இலங்கை மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதுவரை தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 7 போட்டிகளில் பங்கேற்று, அதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 60 போனஸ் புள்ளிகளை பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி சதவீதம் 71.43% ஆகும்.

இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது.

இதில் 6 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும், மூன்று போட்டிகள் சமநிலையில் முடிவடைந்து 84 போனஸ் புள்ளிகளையும் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 70% ஆகும்.

தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி இதுவரை விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை 10.

அதில், நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து ஒரு போட்டியை வெற்றியின்றி முடித்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி 64 போனஸ் புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், வெற்றி சதவீதம் 53.33% ஆகும்.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பாகிஸ்தான் அணி தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், இதுவரை தாம் விளையாடிய 9 போட்டிகளில், 4 வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி, 2 போட்டிகளில் சமநிலை கண்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் வெற்றி சதவீதம் 51.85%.

இந்த தரவரிசை பட்டியலில் இந்திய அணி நான்காவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 6வது இடத்திலும், இங்கிலாந்து அணி ஏழாவது இடத்திலும் உள்ளன.

நியூசிலாந்து அணி 8வது இடத்திலும், பங்களாதேஷ் அணி 9வது இடத்திலும் உள்ளன.