மீண்டும் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோஹிங்யா அகதிகள்!

முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான ரோஹிங்யா அகதிகளில் 103 பேர் நேற்று திங்கட்கிழமை மீண்டும் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பேருடன் பயணித்த படகொன்று நிர்க்கதிக்குள்ளானது.

குறித்த படகில் 45 சிறுவர்கள், 24 பெண்கள் மற்றும் 46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டதுடன், அவர்களுக்கு அவசியமான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன.

தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர், திருகோணமலை ஜமாலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த அகதிகள் அனைவரையும் மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி போதுமானதாக இல்லாத காரணத்தால் அவர்களில் 103 பேர் இரண்டு பேருந்துகள் ஊடாக மீண்டும் முல்லைத்தீவு விமானப்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த ரோஹிங்யா அகதிகளின் சட்டவிரோத படகு பயணத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் 12 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்