மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு செல்லும் மக்கள்

-மூதூர் நிருபர்-

வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மாவடிச்சேனை, சேனையூர் பகுதிகளைச் சேர்ந்த 57 குடும்பங்களின் 153 நபர்கள் மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தற்போது வெள்ளம் குறைவடைந்து வரும் நிலையில் பலர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மாவடிச்சேனை பகுதியிலுள்ள திருகோணமலை – மட்டக்களப்பு வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பரவிச் செல்கிறது.வாகனங்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதையும் காண முடிந்தது.இருப்பினும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இவ் வீதியில் ஏற்கனவே இருந்ததைவிட நீர் பிரவாகம் குறைவடைந்துள்ளதையும் காணமுடிந்தது.

மேலும் வெருகல் பிரதேச செயலகப் பிரிவின் மாவடிச்சேனை,சேனையூர்,வட்டவன்,பூநகர் பகுதிகளிலுள்ள வயல் நிலங்கள் பலவவும் நீரில் மூழ்கிக் காணப்படுவதை காணமுடிந்தது.

வெள்ள அனர்த்தத்தினால் தமது வீடுகள், வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு வருடமும் இந்நிலமை ஏற்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவித்தனர்.தமது பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி இன்றையதினம் வெருகல் -மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமிற்கு வருகை தந்து நிலமைகளை கேட்டறிந்து கொண்டார்.இதில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன் பின்னர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதன்போது வெள்ள அனர்த்தத்தினால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு இடைத்தங்கள் முகாம்கள் இருந்தன.தற்போது வெள்ளம் குறைவடைந்துள்ளது. இங்கு தற்போது 57 குடும்பங்கள் இருக்கின்றனர்.இவர்களுக்கு சகல அமைப்புகளும் உதவி செய்கின்றன.வல்லத்தினால் பாதிக்கப்பட்டோர் அதேபோன்று விவசாயத்தில் பாதிக்கப்பட்டோருக்கோம் அரசாங்கத்தினால் நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்