ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு மையவாடி

-அம்பாறை நிருபர்-

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள மையவாடி அண்மையில் எற்பட்ட டிக்வா புயல் மற்றும் கடும் காற்றுடன் கூடிய கடற்கொந்தளிப்பின்னால் தினமும் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.

இதனால் இம்மையவாடியில் மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது மக்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான கடலரிப்பின்னால் மனித எச்சங்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான தகவல்கள் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் போன்ற அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் கரையேர பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் ஆலோசனைக்கமைய உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் இடைவிடாது 4 நாட்களாக கனரக வாகனங்களின் உதவியுடன் கல் அணைகளை தற்காலிகமாக செய்து முடித்து முடித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் இம்மையவாடி இவ்வாறு கடலரிப்பிற்கு உள்ளான போதிலும் நிரந்திர தீர்வு எதுவும் மேற்கொள்ள முடியாதமையினால் தற்போது இவ்வாறான நிலைமை தோன்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக தடுப்பு அணைகளையும் தாண்டி கடலரிப்பு நிலை இங்கு உருவாகியிருப்பதால் ஆபத்தான நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் பல எலும்புக்கூடு பகுதிகள் கபூர் தடயங்கள் மற்றும் மனித எச்சங்களாக கருதப்படும் பொருள்கள் கரையோரத்தில் சிதறிக் காணப்படுகின்றன.

இது தவிர மையவாடிக்கு அண்மையில் உள்ள விநாயகர் ஆலயம், காரைதீவு கரையோர பாதுகாப்பு காரியாலயம் போன்றன கடலரிப்புக்கு இலக்காகி உள்ளது. இது விடயம் தொடர்பில் அரச அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதே வேளை மீனவர்களின் மீன்பிடி படகுகளும் வள்ளங்களும் நிறுத்த இடமின்றி வீதிக்கு அருகில் இழுத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கொங்கிரீட் வீதிகளும் கடலரிப்பில் உடைந்து கடலுடன் சங்கமித்துள்ளதுடன் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்கள் முற்றாக கடலரிப்புக்கு இலக்காகியுள்ளது இங்கு அவதானிக்க முடிகின்றது.