மின் கட்டணத்தை 20 – 30 சதவீதத்துக்கு இடைப்பட்ட அளவில் குறைக்குமாறு யோசனை!

மின்சாரக் கட்டணம் 20 முதல் 30 சதவீதத்துக்கு இடைப்பட்ட அளவில் குறைக்கப்பட வேண்டும் என மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களின் கருத்தறியும் நடவடிக்கையின்போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த டிசம்பர் 27ஆம் திகதி முதல் கடந்த 10ஆம் திகதிவரை மாகாண மட்டத்தில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் யோசனை பெறும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.

இதன்போது அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்பினர், வலுசக்தி துறையுடன் தொடர்புடையவர்கள் என 400க்கும் மேற்பட்டோர் தங்களது யோசனைகளை முன்வைத்திருந்தனர்.

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் அமுல்படுத்தப்பட வேண்டிய மின்கட்டணம் தொடர்பான தங்களது நிலைப்பாட்டைக் கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

அதற்கமைய, இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் மின்கட்டணத்தில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ள முடியாது என இலங்கை மின்சார சபை தமது யோசனையை முன்வைத்திருந்தது.

எவ்வாறாயினும், கடந்த டிசம்பர் 17ஆம் திகதி, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்வைத்த யோசனையில், மின் உற்பத்தி மற்றும் விநியோகத்துக்காக தற்போது ஏற்பட்டுள்ள தேவையற்ற செலவுகளைக் குறைப்பதன் ஊடாக மின்கட்டணத்தை 11 சதவீதத்துக்கும் 20 சதவீதத்துக்கும் இடைப்பட்ட அளவில் குறைக்க முடியும் என சுட்டிக்காட்டியிருந்தது.

அத்துடன், எரிபொருள் கொள்வனவின்போது, நியாயமான செலவுகளின் அடிப்படையில் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் 28 பில்லியன் ரூபாய் வரை சேமிக்க முடியும் எனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.

அதற்கமைய, 22 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கமுடியும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தமது அடிப்படை பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

இந்தநிலையில், தற்போது பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் இந்த வாரத்தினுள் அறிவிக்கப்படும் என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்