மின்மினி மின்ஹாவுக்கு சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது
-அம்பாறை நிருபர்-
ஆசியாவில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது சம்மாந்துரையைச் சேர்ந்த மின்மினி மின்ஹாவுக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
சர்வதேச ஆசிய உலக சாதனையாளர் அமைப்பினர் ஏற்பாடு செய்த இந்த விருது வழங்கும் விழாவில் சம்மாந்துறை அல்-அர்ஸத் மஹா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் ஜலீல் பாத்திமா மின்ஹா தனது பதினோராவது வயதிலிருந்து (தரம் 06) காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான விழிப்புணர்வு உரையினை இலங்கை முழுவதுமாக நடாத்தி இருக்கிறார்.
இன்று வரைக்கும் 2,60,000 பேருக்கு நேரடியாக உரை நிகழ்த்தியுள்ளார். இதனை பாராட்டும் விதமாகவே இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இம்மாணவி 07ஆம் தரம் கல்வி கற்கும் போது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மனித சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு,. நாடளாவிய ரீதியில் மரக்கன்றுகளை நடும் வேலை திட்டத்தினை சுயமான முறையில் முன்னெடுத்து, இற்றை வரைக்கும் 26,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டியுள்ளார். 08ஆம் வகுப்பு கற்கையில் கல்விகற்க பாடசாலைக்கு செல்லாத மாணவர்களின் பிரச்சினைகளை இனம்கண்டு அவர்களுக்கு கல்வி அவசியம் என உணர்ந்ததன் பேரில் – பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு “கல்விக்கு கரம் நீட்டுவோம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் உதவிகள் புரிந்து வருகிறார்.
09ஆம் வகுப்பு கல்வி கற்கையில் தன்னால் முடியுமான வரை வறுமையை அழிக்க வேண்டும் என எண்ணி இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் சமூக சேவை பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக “ஊணுக்கு உதவுவோம்” எனும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தும் வருகிறார். தற்போது இளைஞர்களின் ஆரோக்கியமான வாழ்வு மற்றும் போதை பொருள் பாவனை அற்ற இளம் சமூகம் எனும் தொனிப்பொருளில் செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.