மின்னியாபோலிஸ் கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!

அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் (Minneapolis) நகரில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 வயது மற்றும் 10 வயது உடைய இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தம்மைத்தாமே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

அத்துடன், அவருக்குக் குறிப்பிடத்தக்க குற்றவியல் பின்னணி எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இந்தநிலையில், குறித்த துப்பாக்கிச்சூடு உள்நாட்டுப் பயங்கரவாதச் செயலா அல்லது கத்தோலிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றமா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.