மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெறும் அமர்வுகள்
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக, இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள முன்மொழிவு குறித்த பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் அமர்வுகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சார சபையின் இந்த முன்மொழிவு குறித்து பொதுமக்கள் வாய்மொழி மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெப்ரவரி 25 ஆம் முதல் மார்ச் 18 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அமர்வுகள் நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிப்பதற்கான முன்மொழிவை கடந்த 13 ஆம் திகதி மின்சார சபை சமர்ப்பித்திருந்தது.
முன்னதாக, 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்காக மின்சார சபை சமர்ப்பித்த 11.57% கட்டண அதிகரிப்புத் திட்டத்துக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கவில்லை.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தம் குறித்து, பொதுமக்களின் சமர்ப்பிப்புகள் மற்றும் ஏனைய காரணிகளைக் கருத்திற் கொண்டே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
