
மின்குமிழ் களவாட முயற்சி: முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்
யாழில் வீதி மின் விளக்குகளை களவாட முயன்ற கும்பலை தடுக்க முற்பட்ட, சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மந்துவில் பகுதியில் கும்பல் ஒன்று வீதியில் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த வீதி மின் குமிழ்களை களவாட முயன்றதை அவதானித்த மக்கள், இது தொடர்பில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு.குகானந்தனுக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த முன்னாள் உறுப்பினர், மின் விளக்குகளை திருட முயன்ற நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, அவர்கள் உறுப்பினர் மீது கடுமையாக தாக்கி அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் உறுப்பினர் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
